சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு என்றும், சொந்த ஊருக்கு வந்தது போல் இருப்பதாகவும் கேலோ இந்தியா தொடக்க விழாவில் பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.
18-வயதுக்கு உட்பட்டோருக்கான 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'வணக்கம் சென்னை' என்று தமிழில் கூறி தமது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவை உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் நாடாக பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்
விஸ்வநாதன் ஆனந்த், பிரக்யானந்தா, பாரா ஒலிம்பிக் மாரியப்பன், ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், அமிர்தராஜ் சகோதரர்கள் போன்ற சாம்பியன்களை உருவாக்குகிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதே தமது குறிக்கோள் என்றார். விளையாட்டுக் கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு உயர்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அனுராத் தாகூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்.முருகன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தொடக்க விழாவில் பிரபல இசைக்கலைஞர்கள் தமிழ்ப் பாடலைப் பாட, பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார். விழா தொடங்குவதைக் குறிக்கும் வகையில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
முன்னதாக, நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கிற்கு காரில் வந்த பிரதமரை வழியெங்கும் திரளான மக்கள் 'மோடி, மோடி' என ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாதஸ்வரக் கலைஞர்களின் இசைநிகழ்ச்சி போன்றவற்றை பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காரில் சென்றவாறே ரசித்தனர்.